இந்தியாவில் பணிக்களத்தின் கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தின் செயல்முறை பெண் பணியாளர்களின் கலவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த, குறைந்த கல்வியறிவு பெற்ற பெண்கள் பணிக்களத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அதே சமயம் கல்வியறிவு பெற்ற இளம் பெண்கள் அதிக அளவில் நுழைந்துள்ளனர். பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைந்துவருவது குறித்த விவாதத்தின் மூலம் வயது முதிர்ந்த, போதிய கல்வியறிவு இல்லாத பெண்களின் வெளியேற்றம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 1983ஆம் ஆண்டில், உழைக்கும் வயதுடைய கிராமப்புறப் பெண்களில் சுமார் 33 சதவீதம் பேர் ஊதியம் பெறும் வேலையில் இருந்தார்கள். 2017இல் இது சுமார் 20 சதவீதமாகக் குறைந்தது. கிராமப்புற இந்தியாவில் பெண்களின் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், பணியாளர்களின் கலவையில் ஏற்பட்ட மாற்றத்தின் இரண்டாவது அம்சமும் - நிரந்தரமற்ற கூலி வேலைகளில் பெண்களின் பங்கு குறைந்திருக்கையில், முறையான சம்பளம் பெறும் வேலையில் பெண்களின் பங்கு அதிகரித்திருக்கிறது - சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் பணிகளின் நிலை குறித்து 2023இல் வெளியான அறிக்கையிலிருந்து (State of Working India Report 2023) தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவரங்கள், அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு ஆய்வுகளின் ஆதாரங்களைப் பயன்படுத்திப் பெண்களின் வருவாய், பாலின அடிப்படையில் வருவாயில் இருக்கும் இடைவெளி ஆகியவற்றில் இந்த மாற்றங்களின் தாக்கங்கள்மீது கவனம் செலுத்துகின்றன.
வேலைவாய்ப்பு வகைகளில் வருமான இடைவெளி
தற்காலிகக் கூலி வேலையிலிருந்து விலகி, முறையான ஊதியம் தரும் வேலைவாய்ப்பை நோக்கிச் செல்லும் மாற்றம் பாலின அடிப்படையிலான வருவாய் இடைவெளியைக் குறைக்கிறது. ஏனென்றால் தற்காலிகக் கூலி வேலைகளில் இடைவெளி அதிகமாக இருக்கும். 2021-22இல், முறையான பணியில் சம்பளம் பெறும் ஒரு ஆணின் சராசரி மாத வருமானம் தோராயமாக ரூ. 17,910. அதேபோலச் சம்பளம் வாங்கும் பெண்ணின் மாத வருமானம் சுமார் ரூ. 13,666. சாதாரணக் கூலி வேலையில் வருவாய் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்தது. ஆண்கள் சம்பாதிப்பதில் 60 சதவீதம் மட்டுமே பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.கெடுவாய்ப்பாக, சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலகட்டங்களில் சுயதொழிலில் பெண்களின் பங்கு தேக்கநிலையிலேயே உள்ளது (கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போதும் அதற்கும் பிந்தைய காலத்திலும் இந்தத் தேக்கம் அதிகரித்துள்ளது). இது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் சுயதொழில் விஷயத்தில் வருவாய் இடைவெளி அதிகம். ஆண்களின் வருவாயில் 40 சதவீதம் மட்டுமே பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
அட்டவணை 1: வெவ்வேறு வேலைவாய்ப்புகளில் ஆண்-பெண் வருமானம்

ஆதாரம்: PLFS 2021-22. Adapted from Table 6.1 in State of Working India 2023.
இந்த ஏற்றத்தாழ்வுகள் வருவாய்ப் பங்கீடு நெடுகிலும் எவ்வாறு செயல்படுகின்றன? வருமான ஏணியில் பெண்கள் மேலே செல்லும்போது ஆண்களின் வருமானத்துக்கு நெருக்கமாக அவர்கள் சம்பாதிக்கிறார்களா அல்லது இடைவெளி இன்னும் அதிகரிக்கிறதா? படம் 1 (கீழே) இந்தக் கேள்விக்கான பதிலைத் தருகிறது. ஒவ்வொரு வகை வேலைவாய்ப்பிற்கும், நாங்கள் வருவாயைப் பத்து குழுக்களாகப் பிரிக்கிறோம். ஆகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிலிருந்து (decile 1), ஆக அதிக வருமானம் ஈட்டுபவர்கள்வரை (decile 10) இந்த அட்டவணை பிரித்துக் காட்டுகிறது. சுய வேலைவாய்ப்பில் பாலின அடிப்படையிலான வருவாய் இடைவெளி அதிகமாக உள்ளதை அட்டவணை 1இல் காண்கிறோம். இதற்கு நேர்மாறாக, மாதச் சம்பளம் பெறும் வேலைவாய்ப்பில் பாலின அடிப்படையிலான வருவாயில் மிகக் குறைவான இடைவெளி உள்ளது. சொல்லப்போனால், ஒருவர் வருவாய்ப் பரப்பில் முன்னேறிச் செல்லும்போது இந்த இடைவெளி படிப்படியாகக் குறைகிறது. மாதச் சம்பளம் பெறும் பிரிவில், சராசரியாக ஆண்கள் சம்பாதிப்பதில் 90 சதவீதத்தைப் பெண்கள் சம்பாதிக்கிறார்கள். சுய வேலைவாய்ப்புப் பிரிவில் வருவாய் இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளது. ஆண்கள் சம்பாதிப்பதில் 60 சதவிகிதம்தான் பெண்கள் சம்பாதிக்கிறார்கள். ஒருவர் வருவாயில் மேல்நோக்கிச் செல்லும்போது சுயதொழிலில் பாலின வருவாய் இடைவெளி குறைகிறது என்றாலும் அந்த இடைவெளி மிக அதிகமாகவே உள்ளது.
படம் 1: வருமானத்தில் பாலின இடைவெளி

ஆதாரம்: PLFS 2021-22. This corresponds to Figure 6.1 in State of Working India 2023.
காலமும் வருமான இடைவெளிப் போக்குகளும்
சுயதொழில் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் 2017முதல் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. 1980களிலிருந்தே ஊதிய வருவாய் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. படம் 2, காலப்போக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கான வருவாய் இடைவெளியின் நீண்டகாலப் போக்குகளைக் காட்டுகிறது.
படம் 2: மாதச் சம்பளத்தில் உள்ள இடைவெளியில் காலப்போக்கில் நிகழ்ந்த போக்குகள்

ஆதாரங்களும் குறிப்புகளும்: Various rounds of NSS Employment Unemployment and PLFS. This corresponds to Figure 6.4 in State of Working India 2023.
போக்குகளைப் புரிந்துகொள்ளுதல்
காலப்போக்கில் வருவாய் இடைவெளி குறைவது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, இரண்டாவது, மூன்றாவது காலாண்டுகளில். இரண்டு சாத்தியங்கள் இந்தப் போக்கை விளக்கலாம். ஒன்று, தொழிலாளர் சந்தையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு காலப்போக்கில் குறைந்திருக்கலாம். முதலாளிகள் ஆண்களையும் பெண்களையும் ஒரே மாதிரியாக நடத்துகிறார்கள். அல்லது, பெண்களிடையே அதிக கல்வித் திறன், மாதச் சம்பள அடிப்படையில் அவர்கள் பணிசெய்யும் தொழில்களிலும் தொழில் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்; அத்துடன், தொழிலாளர் சந்தையில் பங்குபெறும் பெண்களின் இயல்பும் மாறியிருக்கலாம்.
முன்பே குறிப்பிட்டது போல், இந்தக் காலகட்டத்தில், பெண் பணியாளர்களின் கலவையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வயது முதிர்ந்த, குறைந்த கல்வியறிவு பெற்ற பெண்கள் பணிக்களத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அதே சமயம் இளையவர்கள், அதிகம் படித்த பெண்கள் உள்ளே நுழைந்துள்ளனர். விவசாயத்தில் குறைவான பெண்களே பணிபுரிகிறார்கள். சேவைத் துறையில் அதிகமான பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
பணியாளர்களின் கலவையில் ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் வருவாய் இடைவெளியில் ஏற்படும் மாற்றங்களை எந்த அளவுக்கு விளக்குகின்றன என்பதைக் கண்டறியத் தரப்படுத்தப்பட்ட அலசம் முறையைப் பயன்படுத்துகிறோம். Kitagawa-Oaxaca-Blinder எனப்படும் அலசல் வழிமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சராசரி வருவாய் வேறுபாட்டைக் கணக்கில் கொள்கிறது; "விளக்கப்படக்கூடிய வேறுபாடுகள்", அதாவது இரு குழுக்களிடையே கவனிக்கக்கூடிய பண்புகளில் உள்ள வேறுபாடுகள், "விளக்கப்படாத வேறுபாடுகள், ” அதாவது, கவனிக்க முடியாத பண்புகளில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை இந்த வழிமுறை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கல்வி, திருமணம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொழில், தொழில் துறை ஆகியவை கவனிக்கக்கூடிய பண்புகளில் அடங்கும். கவனிக்க முடியாத கூறு பெரும்பாலும் பாகுபாட்டை அளவிடுவதாக விளக்கப்படுகிறது. தரவுகள் கிடைக்காத பண்புகளின் விளைவும் இதில் அடங்கும்.
விளக்கப்பட்ட, விவரிக்கப்படாத கூறுகள் காலப்போக்கில் எப்படி மாறுகின்றன என்பதை அட்டவணை 2 காட்டுகிறது. 1983முதல், விளக்கப்பட்ட கூறுகளில் நிலையான சரிவு உள்ளது. தொழிலாளர் சந்தையில் ஆண்கள், பெண்களின் குணாதிசயங்கள் காலப்போக்கில் எவ்வாறு ஒரே மாதிரியாக மாறுகின்றன என்பதை இது பிரதிபலிக்கிறது, எனவே, பாலின ஊதிய இடைவெளியை இது குறைந்த அளவிலேயே விளக்குகிறது. 2021-22ஆம் ஆண்டில் வருவாய் இடைவெளியில் 80 சதவீதம் இந்த விவரிக்கப்படாத கூறுகளால் ஏற்பட்டிருக்கிறது.
அட்டவணை 2: பாலின வருமான இடைவெளியின் வேறுபாடுகளை ஆராய்தல்

ஆதாரங்களும் குறிப்புகளும்: Various rounds of NSS Employment Unemployment and PLFS. This corresponds to Table 6.4 in State of Working India 2023.
கிராமப்புறத் தொழிலாளர்களின் விஷயத்தில் இந்த அதிகரிப்பு வியப்புக்குரிய அளவில் உள்ளது. 2021-22இல் பாலின ஊதிய இடைவெளியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு விளக்கப்படாத காரணிகளைக் கொண்டதாக உள்ளது. ஆனால் நகர்ப்புற இந்தியாவிலும் மாத ஊதியம் பெறும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை விரைவாக உயர்ந்த காலகட்டம் (1999முதல் 2017வரை) விவரிக்கப்படாத காரணிகளை அதிகமாகக் கொண்டிருந்தது. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு பொதுவானது. கிராமப்புற இந்தியாவில் இந்த இடைவெளியின் அளவு கணிசமாக அதிகரித்தது. ஆனால் நகர்ப்புறங்களில் அதிகரிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மாத வருமானம் தரும் வேலைகளில் பெண்கள் ஈடுபடுவது விரைவாக அதிகரித்த அதே காலகட்டத்தில், பாலின ஊதிய இடைவெளியின் விவரிக்கப்படாத பகுதியும் அதிகரித்தது. பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணமாகப் பொதுவாகக் கூறப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியப் பெண் பணியாளர்களிடத்தில் ஒரு பெரிய மாறுதல் காணப்படுகிறது. மாதச் சம்பளம் வாங்கும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு நல்ல செய்தி. ஆனால் இந்த அதிகரிப்பு வருவாயில் விவரிக்கப்படாத இடைவெளி திட்டமிட்ட ரீதியில் குறைவதற்கு வழிவகுக்கவில்லை. மாறாக, இடைவெளியை ஏற்படுத்துவதில் பாகுபாட்டுக்கு இருக்கக்கூடிய பங்கைக் கல்வி நிலை உணர்த்துகிறது. கல்வியறிவும் விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகளும் அதிகரித்தாலும், ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். ஆனால் வருவாய் ஏணியில் மேலே செல்லும்போது இந்த இடைவெளி குறைவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. முறை சார்ந்த பொருளாதாரப் பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை இது பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். எனவே, பெண்கள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் செயல்பாடுகளும் முறை சார்ந்த வேலைவாய்ப்புகளை விரிவாக்குவதற்கான கொள்கை சார்ந்த நடவடிக்கைகளும் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும்.